Kathir News
Begin typing your search above and press return to search.

களங்கம் வரக்கூடாது என்பதற்காக, உயிரிழப்புகளை குறைத்துக்காட்டுவதா? - ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

களங்கம் வரக்கூடாது என்பதற்காக, உயிரிழப்புகளை குறைத்துக்காட்டுவதா? - ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jun 2021 3:15 AM GMT

"ஸ்டாலின் தனது அரசின் பெயருக்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக, உயிரிழப்புகளை குறைத்துக்காட்டுவது எவ்விதத்தில் நியாயம்?" என தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தினமும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட, தமிழக அரசால் கணக்கில் காட்டப்படும் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வந்தது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், அவர்களை கொரோனாவால் உயிர் இழந்தவர்களாக கணக்கில் காட்டாதது தெரியவந்துள்ளது. மேலும், இறப்புச் சான்றிதழிலும் அவர்கள் இணை நோய்களால் உயிரிழந்ததாகவே குறிப்பிடப்பட்டு வருகிறது.

இதனால், கொரோனாவால், வீட்டில் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தவரை இழந்த குடும்பங்களும், பெற்றோரை இழந்த குழந்தைகளும், மத்திய, மாநில அரசுகளின் நிவாரணத்தை பெற இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் அவர்கள் நிர்கதியாக உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் விதிமுறைகள் படி, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், அவர்களையும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்த்து இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசின் இந்த தவறான செய்கையை சுட்டிக்காட்டி குட்டு வைத்திருக்கிறது.

எனவே, முதல்வர் ஸ்டாலின் தனது அரசின் பெயருக்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக, உயிரிழப்புகளை குறைத்துக்காட்ட இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்" என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News