Kathir News
Begin typing your search above and press return to search.

"மது ஆலைகளின் அழுத்தத்திற்கு பணிந்துவிட்டாரா ஸ்டாலின்?" - சந்தேகிக்கும் மரு.ராமதாஸ்!

மது ஆலைகளின் அழுத்தத்திற்கு பணிந்துவிட்டாரா ஸ்டாலின்? - சந்தேகிக்கும் மரு.ராமதாஸ்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Jun 2021 2:30 AM GMT

"மது ஆலைகளின் அன்பான அழுத்தத்திற்கு பணிந்து விட்டாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?" என சந்தேகத்தை கிளப்பியுள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்.

தமிழ்நாட்டில் இன்று முதல் 27 மாவட்டங்களில் மதுபானகடைகள் தமிழக அரசு திறக்க இருக்கிறது. இதனை அனைத்து தரப்பினரும் கொரோனோ காலத்தில் இது வேண்டாத செயல் என விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர். இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித் தான் வர்ணிக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை காலையுடன் முடிவடையவிருக்கும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை தொடங்கி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். இது மிகவும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா முதல் அலையில் அதிகபட்ச தினசரி பாதிப்பே 6993 மட்டும் தான். ஆனால், இப்போது தினசரி தொற்று அதைவிட 250% அதிகமாக உள்ளது.

ஆனால், இந்த ஆபத்தை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் பரவலுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தி மது தான் என்றும், கொரோனா காலத்தில் மது கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மது அருந்தும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது; அதனால் போதையில் இருப்பவர்களை கொரோனா எளிதாக தாக்குகிறது.

தேநீர்க்கடைகள் திறக்கப்பட்டால் கொரோனா பரவி விடும்; ஆனால், மதுக்கடைகளை திறந்தால் கொரோனா பரவாது என்று நம்பும் தமிழக அரசின் அறியாமையைக் கண்டு அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. மதுக்கடைகளை திறப்பதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என்பது உள்ளிட்ட தீய விளைவுகள் தமிழக முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்காது. ஏனென்றால், சரியாக ஓராண்டுக்கு முன்பு தான், கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார்.

அப்படிப்பட்டவர் இப்போது மதுக்கடைகளை தாராளமாக திறந்து விடுகிறார் என்றால் அவருக்கு யாரிடமிருந்து எந்த அளவுக்கு அழுத்தம் வருகிறது? மது ஆலைகளின் அன்பான அழுத்தத்திற்கு பணிந்து விட்டாரா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் வருவாய் பெருமளவில் குறைந்து விட்ட சூழலில், அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை உணர முடிகிறது. அரசின் வருவாயைப் பெருக்க குறுகிய காலத் திட்டங்கள், நீண்டகாலத் திட்டங்கள் என பல வழிகள் உள்ளன. அரசு விரும்பினால் அந்த வகையில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது." இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News