தி.மு.க ஆட்சியில் பல்வேறு பொருட்களின் விலை திடீர் உயர்வு - எல்.முருகன் கண்டனம்!
By : Parthasarathy
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்து ஒரு மாதத்திற்கு மேல் நிறைவடைந்து விட்டது. ஆனால், இந்த ஒரு மாதத்திலேயே சிமெண்ட், எம் சாண்ட், கம்பி, செங்கல் ஆகிய கட்டுமான பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலே பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் Dr.எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு ,அவர்களுக்கு மேலும் ஒரு பெரிய சுமையாக அமைந்துள்ளது. குறிப்பாக தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு மூட்டை சிமெண்ட் விலை தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது.ஆனால், அது இப்போது 520 ரூபாயாக அதிகரித்து விட்டது. அதேபோல், எம் சாண்ட், கம்பி, செங்கல் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அம்மா சிமெண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரு மூட்டை சிமெண்ட் 226 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அம்மா சிமெண்ட் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. கட்டுமான பொருட்கள் மட்டுமல்லாமல், தாய்மார்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், சமையல் பொருட்கள், காய்கறிகள் விலையும் அதிகரித்துவிட்டது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், திடீரென பல்வேறு பொருட்களின் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, சிமெண்ட் விலை முதல் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல காய்கறி விலைகள், சமையல் எண்ணெய் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."என்று கூறியுள்ளார்.