Kathir News
Begin typing your search above and press return to search.

"கொரோனா தடுப்பூசியை சீர்குலைக்க சதி, எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம்" - நட்டா பகீர் குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசியை சீர்குலைக்க சதி, எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் - நட்டா பகீர் குற்றச்சாட்டு!

ParthasarathyBy : Parthasarathy

  |  19 Jun 2021 8:13 AM GMT

நேற்று பா.ஜ.க எம்.பி-க்கள், மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில் "இந்த கொரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க சதி செய்து வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.


அந்த ஆலோசனை கூட்டத்தில் ஜே.பி. நட்டா "கொரோனா வைரஸுக்கு எதிராக மிக தீவிரமாகப் போரிட்டு வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றன. ஊரடங்கு அமல் செய்யப்பட்டால், ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஊரடங்கு அமல் செய்யப்படாவிட்டால், கொரோனா வைரஸ் பரவுவதாக புகார் கூறுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்."

"அதே போல் கொரோனா தடுப்பூசி திட்டத்தைக்கூட எதிர்க் கட்சி தலைவர்கள் விட்டு வைக்கவில்லை. தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையான தகவல்களை பரப்பி வருகின்றனர். தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் நிணநீர் இருப்பதாக கூறுகின்றனர். தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்."


"அதனை தொடர்ந்து தடுப்பூசிகளை நாங்களே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநில அரசுகளும் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் மாநில அரசுகளால் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடியவில்லை.மேலும் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டின. இதைத் தொடர்ந்து மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது."


"தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள நாங்கள் எலிகள் கிடையாது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, சசி தரூர் உள்ளிட்டோர் கூறுகின்றனர். இதன்மூலம் மக்களிடையே அச்சத்தை அவர்கள் விதைக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் நாடகத்தை மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும். அவர்களின் சதியை முறியடிக்க வேண்டும்

"கொரோனா வைரஸ் பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கிறது. முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான மாநில அரசுகள் எச்சரிக்கையாக செயல்படாமல், மத்திய அரசு மீது வீண் பழி சுமத்துகின்றன.

கொரோனா காலத்தில் பாஜக எம்.பி.க்கள், தலைவர்கள், தொண்டர்கள் மக்களோடு இருந்து அவர்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். ஆனால் எதிர்க் கட்சி தலைவர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர். மத்திய அரசின் அதிதீவிர நடவடிக்கைகளால் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 2,084 கரோனா மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. PM CARES நிதியின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 130 கோடி இந்தியர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்." என்று அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News