நீட் விவகாரத்தில் கையாலாகாத தனத்தை மறைக்க தமிழக பா.ஜ.க-வை துணைக்கு அழைக்கும் ஸ்டாலின்?

நீட் தேர்வு விவகாரத்தில் பொய் பிரச்சாரத்தை செய்து ஆட்சியை தி.மு.க பிடித்ததை மக்கள் உணர்ந்துகொண்டதையடுத்து மக்களை மடைமாற்றும் விதமாக தமிழக பா.ஜ.க-வை துணைக்கு இழுத்துள்ளது தி.மு.க என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது, பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் எழுந்து பதிலளித்தார். அப்போது, தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்பதில், ஆளும் கட்சி உறுதியாக இருக்கிறது எனவும், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், நீட் விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார். அனைத்துத் தரப்பும் நீட் விலக்குக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், இதற்கு பா.ஜ.க ஆதரவு குரல் கொடுக்கத் தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு விதி விலக்கு தரப்பட்டால் பா.ஜ.க ஆதரவு தர தயார் என குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து பிரச்சாரத்தை மையப்படுத்தி ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆனால் அதனை நிறைவேற்ற இயலவில்லை என மக்கள் உணர்ந்துகொண்ட வேளையில் சமாளிக்க ஏதுவாக, தி.மு.க-வின் கையாலாகாததனத்தை மறைக்க தமிழக பா.ஜ.க-வை துணைக்கு இழுப்பதாக தமிழக பா.ஜ.க-வினர் கருதுகின்றனர்.