பண மோசடியில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக் - அமலாக்கத்துறை சம்மன்!
By : Parthasarathy
மஹாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக். இவர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத அவரது இரண்டு உதவியாளர்களையம் கைது செய்தனர்.
காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சி.பி.ஐ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை திரட்டும் பணியில் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.இதன் அடிப்படையில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், விசாரணையின் போதே குற்றவாளியின் சொத்துக்களை முடக்கி, பின் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் இந்த பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் தனி உதவியாளர்குந்தன் ஷிண்டே ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.