'சட்டமன்றத்தில் நுழைந்துவிட்ட தைரியத்தில் பா.ஜ.க இருக்கிறது' - தி.க வீரமணி புலம்பலோ புலம்பல்!
By : Mohan Raj
தமிழக சட்டமன்றத்தில் உள்ளே நுழைந்து விட்ட தைரியத்தில் தி.மு.க-வின் 'ஒன்றிய அரசு' முழக்கத்துக்கு எதிரான தீர்மானங்களை பா.ஜ.க நிறைவேற்றி வருவதாக திராவிடர் கழகம் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பா.ஜ.க-வின் தீர்மானங்களாக, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு விளைவிக்கும் எந்த செயலையும் பா.ஜ.க. வேடிக்கை பார்க்காது. சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தி.மு.க-வினர் மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். பேரவையில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 'மாநிலங்களால் ஆனது இந்தியா. அரசமைப்புச் சட்டத்தில் 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்'என்றே இந்தியா வரையறுக்கப்பட்டுள்ளது!'என்று கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்டதாக இருக்கலாம் என்றே அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா தனது நிர்வாக வசதிக்காக தன்னை மாநிலங்களாகப் பிரித்து அரசாளும் என்பதே இதன் பொருள். எனவே இந்தியாவில் அமைந்ததே மாநிலங்கள். இதில் நிலைத்து நிற்பது இந்தியாதான்.
ஒன்றியம் என்ற சொல்லில் குற்றம் இல்லை, என்றாலும், இதைச் சொல்வதில் பெரும் உள்நோக்கம் இருப்பதாகவே பா.ஜ.க. கருதுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்ற மறு நிமிடமே நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று பதிவிட்டார். 1962 இல் நாடாளுமன்றத்தில் அண்ணா, நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று கூறினார். இதுபோன்ற தேச விரோதக் குரல்களை ஒடுக்கக் கடும் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனசென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களைப் பெற்று, தமிழ் நாடு சட்டமன்றத்தில் உள்ளே நுழைந்து விட்ட தைரியத்தில் இப்படி அபத்தமான தீர்மானங்களைப் போட்டு ஒன்றிய ஆட்சியாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இருக்கிறது என்பதால் இது போன்ற மிரட்டல் வித்தைகளில் ஈடுபட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.