"அம்மாவின் மறு உருவமே" - அ.தி.மு.கவில் கலகத்திற்கு அடிபோடும் சசிகலா ஆதரவு சுவரோட்டிகள்!

"அம்மாவின் மறு உருவமே" என சசிகலாவை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அ.தி.மு.கவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒரு புறம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் தனது பேச்சுக்கள் அடங்கிய ஆடியோக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் சசிகலா. மறுபுறமோ அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே சசிகலாவை புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டி வருவதால் அ.தி.மு.கவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பிடதக்க பரபரப்பு என்னவென்றால் அ.தி.மு.கவின் உட்கட்சி பதவிகளில் இருப்பவர்கள் இந்த சுவரோட்டிகளை தயார் செய்து ஒட்டி வருவதுதான் அ.தி.மு.க தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதுரை முழுவதும் "ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன் பல இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் அ.தி.மு.க புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வரும் நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க தலைமை முழுமூச்சாக செய்து வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாது ஆங்காங்கே சசிகலா'வை ஆதரித்து சுவரோட்டிகள் அ.தி.மு.க நிர்வாகிகள் ஒட்டி வருவது கலகம் துவங்குவதற்கான முன்னேற்பாடுகள் போல தெரிகிறது.