"தமிழக அரசை மத்திய அரசு பாராட்டியுள்ளது" - பெருமை பொங்க கூறும் அமைச்சர் ம.சுப்பிரமணியன்!

"கடந்த 2 மாதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்துவந்தது உண்மைதான். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழக அரசு, மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது" என இதுவரை மத்திய அரசு தடுப்பூசி தரவில்லை என விமர்சித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசை பாராட்டி பல்டி அடித்துள்ளார்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கர்ப்பம் தரித்த பெண்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் இன்று தமிழகத்தில் துவங்கியது. தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். உதயநிதி ஸ்டாலின் அருகில் நின்றார்.
அதன் பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள 1½ கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 6 லட்சத்து 41 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.
ஜூலை மாதத்தில் மத்திய அரசு மூலம் 71 லட்சம் கொரோனா தடுப்பூசி பெற்று பொதுமக்களுக்கு செலுத்தப்படும். ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தலின்படியும், மத்திய அரசின் உத்தரவின் பேரிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் இன்று காலை இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கர்ப்பிணிபெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது.
கடந்த 2 மாதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்துவந்தது உண்மைதான். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழக அரசு, மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது" என பெருமிதமாக தெரிவித்தார்.