சசிகலா அ.தி.மு.க-வை குறிவைக்க; அ.ம.மு.க கூடாரத்தை காலி செய்யும் தி.மு.க!

அ.தி.மு.க-வை கைப்பற்ற சசிகலா திட்டமிடும் சமயத்தில் காலியாகும் அ.ம.மு.க கூடாரம்.
டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன சமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியும் உருவானது. ஆனால் அதனை தொடர்ந்து வந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை, மாறாக போட்டியிட்ட பல இடங்களில் டெபாசிட் கூட வாங்க இயலாது போனது அ.ம.மு.க.
மேலும் தற்பொழுது சசிகலா அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை, வாழ்த்து போஸ்டர்கள் என எப்படியாவது அ.தி.மு.க-வை கைப்பற்றிவிட துடிக்கும் வேளையில் அ.ம.மு.க கூடாரம் காலியாகி வருகிறது.
ஆரம்பத்தில் அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த செந்தில்பாலாஜி தி.மு.க. கரூர் மாவட்டச் செயலாளராகி தேர்தலில் வெற்றி பெற்று இப்போது மின்துறை அமைச்சராகி விட்டார். அவரது முயற்சியால் ஏராளமான அ.ம.மு.க நிர்வாகிகள் தி.மு.க.வுக்கு வந்து விட்டனர். அ.ம.மு.க துணைப்பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நேற்று தி.மு.க-வுக்கு வந்து விட்டார்.
ஆரம்பத்தில் அ.ம.மு.க.வில் இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தங்கதமிழ்ச்செல்வன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவாளர்களை தி.மு.க பக்கம் இழுத்து வந்து விட்டனர்.
சசிகலா மீது அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அ.ம.மு.க.வில் இருந்து மேலும் பல முன்னாள் எம்.எல்.ஏ-க்களாகிய நிலக்கோட்டை தங்கதுரை, ஆம்பூர் பாலசுப்பிமணியன், ஒட்டபிடாரம் சுந்தரராஜ், விளாத்திகுளம் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகி விட்டனர்.
இப்படி சசிகலா அ.தி.மு.க-வை பிடிக்க திட்டமிடும் சமயத்தில் அ.ம.மு.க கூடாரம் காலியாகி வருகிறது.