"தமிழக அரசு மேகதாது அணை விஷயத்தில் அரசியல் லாபம் பெற முயற்சி" - கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு!
By : Parthasarathy
காவிரி நதியின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு அவர்களின் தண்ணீர் தேவைக்காகவும் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகவும் தடுப்பணை கட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதற்கு ஸ்டாலின், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிட வேண்டும் என்று பதில் அளித்தார்.
இந்த மேகதாது அணை விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும்போது " தமிழக அரசு காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதுபோல தான் தற்போது மார்கண்டேய நதி விவகாரத்திலும் தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது. குடிப்பதற்காகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும், கர்நாடகா எல்லைக்குள் மேகதாது அணை கட்டப்படுகிறது. இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் எப்போதும் போல் வழங்கப்படும்.
மேகதாது அணையால் தமிழகத்திற்கும் பயனுள்ளது என தெரிந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை கர்நாடக அரசும் சட்ட ரீதியாக போராடும். தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதால் மேகதாது அணை விஷயத்தில் அரசியல் லாபம் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.
கர்நாடகாவின் நீர் தேவைக்காகவே மேகதாது திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கிருஷ்ண ராஜ சாஹரத்திற்குப் பிறகு எங்களுக்கு நீர் சேமிப்பு பகுதிகள் எதுவும் இல்லை. மழை பெய்யாத காலங்களில் இங்கு சேமித்துவைத்துள்ள நீரை பயன்படுத்துவோம்." என்று அவர் கூறினார்.