பள்ளி குழந்தைகள் மனதில் பிரிவினைவாதத்தை விதைக்கிறதா தி.மு.க. ? மக்களிடையே கடும் அதிருப்தி !

By : Mohan Raj
"2022 முதல் தமிழக அரசின் பள்ளி பாட புத்தகங்களில் 'மத்திய அரசு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையே இடம் பெறும்" என பிரிவினைவாதத்தை மாணவர்கள் மத்தியில் வளர்த்துவிடும் நோக்கில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அமைச்சரவை பொறுப்பேற்ற நாள் முதலே 'மத்திய அரசு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. அதாவது மாநிலங்களுக்கு தான் அதிகாரம் என்பது போல மத்திய அரசில் மாநிலங்கள் பங்குபெறாது என்பது போல பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தி.மு.க அரசு கூறி வந்தது. இதனை ஆளும் பா.ஜ.க தரப்பு கடுமையாக எதிர்த்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, இனி பாட புத்தகங்களிலும் 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையே இடம் பெறும் என அறிவித்துள்ளார். 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல், சிறுபான்மை மொழி பாடநூல், தொழிற்கல்வி பாடப்புத்தகம், ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான பாட புத்தகம், பல்நுட்ப கல்லூரிக்கான பாட புத்தகம் ஆகியவற்றை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் புதிய தலைவராக பட்டிமன்றங்களில் இரட்டை அர்த்தத்துடன் பேசி வருபவரும், தி.மு.க பிரச்சார கூட்டங்களில் கூட்டம் கலையாமல் இருக்க பெண்களின் இடுப்பை பற்றி தரக்குறைவாக விமர்சித்து வந்தவருமான திண்டுக்கல் ஐ.லியோனி'க்கு தலைமையை புகழ்ந்து பேசியதன் பேரில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2022 முதல் தமிழக அரசின் பள்ளி பாட புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும்" என தெரிவித்தார்.
இரட்டை அர்த்த வசனங்களை பேசி கைதட்டல் வாங்கும் பட்டிமன்றம் போல பள்ளி கற்கும் சிறார்களின் பிஞ்சு மனதில் பிரிவினையை இதன் மூலம் உருவாக்க லியோனி நினைக்கிறார்.
