குலதெய்வ கோவிலுக்கு போக திருவாரூர் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதா?

முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய திருவாரூர் விஜயம் குலதெய்வ கோவில் வழிபாட்டிற்காகவே என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் முதன்முறையாக திருவாரூருக்குக் குடும்பத்தினருடன் சென்றார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஜூலை 6-ம் தேதி மாலை திருச்சி சென்றவர், அங்கிருந்து காரில் திருவாரூர் சென்றார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்குப் புறப்பட்டார். கருணாநிதி நினைவு இல்லத்துக்குச் சென்று மரியாதை செய்வதுதான் திட்டம்.
இதற்காகக் கட்சியினரும் அங்கு காத்திருந்தனர். ஆனால், திருக்குவளையிலுள்ள குலதெய்வமான அங்காளம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென ஸ்டாலினிடம் திருமதி துர்கா ஸ்டாலின் கேட்டதாக தெரிகிறது. மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாகச் சம்மதித்திருக்கிறார். கோயிலுக்குச் சென்ற ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கருணாநிதி நினைவு இல்லத்துக்குச் சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு அவர் குத்தாலம், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், 'குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற பிறகு வேறு எங்கும் செல்லக் கூடாது; நேராக வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும்' என்று ஐதிகத்தைச் சுட்டிக்காட்டி கட்சி நிகழ்ச்சிகள் கேன்சல் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் திருவெண்காட்டில் இருக்கும் திருமதி துர்காவின் வீட்டுக்குச் சென்று உணவருந்திய பிறகே சென்னை திரும்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source - ஜூனியர் விகடன்.