தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டும் ஸ்டாலின்? ஒரு மாதமாக காத்திருக்கும் தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர்!

By : Mohan Raj
"தூய்மை பணியாளர்கள் விவகாரம் குறித்து பேச நேரம் கேட்டு ஒரு மாத காலமாக காத்திருக்கிறேன் ஆனால் முதலமைச்சர் நேரம் ஒதுக்க மறுக்கிறார்" என குற்றம் சாட்டியுள்ளார் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன்
பணி இழந்த தூய்மைப் பணியாளர்கள் சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று துப்புரவுப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் அவர்களை சந்தித்தனர். இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேரில் வரவழைத்து, துப்புரவுப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "கடந்த ஆண்டு கரோனா பரவல் காலத்தில்இந்த ஒப்பந்தப் பணியாளர்கள்கடுமையாகப் பணியாற்றியுள்ளனர். அவற்றை எல்லாம் மறந்து, மாநகராட்சி நிர்வாகம் இவர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இவர்கள் கடந்த ஜனவரியில் போராட்டம் செய்தபோது, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மாநகராட்சியில் கடிதம் அளித்திருந்தார். அதை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விசாரணை நடத்தினேன்.
பணி நீக்கம் செய்யப்பட்ட பலருக்கு, தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திலேயே பணி வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ளவர்களை மாநகராட்சியில் வேறு துறைகளில் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும்" என அவரை கூறினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பேச நேரம் நேரம் கேட்டு கடந்த ஒரு மாத காலம் காத்திருப்பதாகவும் ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதற்கு நேரம் ஒதுக்கி அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
