'எதிர்க்கட்சியாக இருந்தபோது வதந்தி கிளப்பிட்டு இப்போது தடுப்பூசி போட சொல்றீங்களா?' வெளுத்து வாங்கிய எடப்பாடி!

"எதிர்கட்சியா இருக்கும்போது தடுப்பூசி பற்றி வதந்தி கிளப்பிவிட்டு இப்போ போட சொல்லி கூவுறீங்களா?" என தி.மு.க'விற்கு எதிராக காட்டமான அறிக்கையை எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா நோய்த் தடுப்பூசியினை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கும் என்று, படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று எங்கள் அரசின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு அறிவித்தது. அப்போது, தமிழ் நாட்டில் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பின்விளைவுகள் ஏற்படும் என்று தமிழக மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தினர். எனவே, மக்களின் அச்சத்தைப் போக்க நானும், அரசில் இருந்த அமைச்சர்களும், அரசு மருத்துமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று மக்களிடையே பொய்யாக வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறென்ன செய்தது இந்த அரசு? சரியான முறையில் திட்டமிடாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு மருந்து எவ்வளவு பேருக்கு தேவைப்படும்? அதில் எத்தனை பேர் இணை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? யாருக்கு முதலில் அளிக்க வேண்டும்? என்ற திட்டமிடல் இல்லை.
இதனால் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. கூடுகின்ற மக்களிடையே, தடுப்பூசி எண்ணிக்கை குறித்த உண்மையைக் கூறாமல், மத்திய அரசின் மேல் சுலபமாக பழி சுமத்தி கடமையில் இருந்து தி.மு.க அரசு தப்பித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதைத் தவிர்க்க, கடந்த 15 நாட்களாக தொற்று எண்ணிக்கையையும், இறப்பையும் தி.மு.க அரசு குறைத்துக் காட்டுவதாக செய்திகள் வருகின்றன. இந்த அரசு முறையாக மக்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை.
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களில் பலர், இரண்டு மாதங்கள் கடந்த பின்னும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக பரிதவிக்கிறார்கள். கோவாக்சின் மருந்து போட்டவர்கள் அதே மருந்தை போட வேண்டும் என்றும், கோவிஷீல்டு மருந்து போட்டவர்கள் அதே மருந்தை போட வேண்டும் என்றும், இவை இரண்டும் பல தடுப்பூசி போடும் மையங்களில் இருப்பில் இல்லை என்றும் பொதுமக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள். எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து, கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில், மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதைக் கைவிட்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் இந்த அரசு ஈடுபட வேண்டும். மத்திய அரசால் தமிழ் நாட்டிற்கு கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது.
இதனைபற்றி தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என எடப்பாடி பழனிசாமி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.