விவசாய நிலங்களை குறி வைக்கும் திட்டம் : ஸ்டாலின் தடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் வலியுறுத்தல்!
By : Parthasarathy
GAIL நிறுவனம் எரிவாயுவை எடுத்துச்செல்வதற்க்காக குழாய்களை அமைக்கும் பணியை தமிழகத்தில் தொடங்க சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டது. இந்த திட்டத்தில் சில குழாய்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்பட்டு அதன் வழியாக எரிவாயுவை எடுத்து செல்ல அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இதற்கு அங்கு இருந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களில் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. இவ்வாறு இருக்கையில் தற்போது GAIL நிறுவனம் எரிவாயு குழாய்களை விவாசாய நிலங்களில் அமைக்கும் திட்டத்தை மீண்டும் துவங்கியுள்ளது.
இந்த எரிவாயு குழாய் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்க்கையில் "கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு எடுத்து செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள 'GAIL' நிறுவனம் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளையும் துவக்கியது. இது தொடர்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் 2013 மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அம்மாவின் அரசு, 'GAIL நிறுவனம் எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலை ஓரமாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு GAIL நிறுவனத்திற்கு ஆதரவாக அமைந்தது. அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தால், அந்த நிறுவனத்தின் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில், ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை, விவசாயிகளின் நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை, GAIL நிறுவனம் மீண்டும் துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் புதிதாக அமைக்கப்பட உள்ள, தர்மபுரி - ஓசூர் நான்கு வழிச்சாலையில் சாலையோரம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
எனவே, விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில், தொழிற்சாலைகளின் ஓரமாக பதிக்க, ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.