"போலீஸ்காரங்க எங்களை ஒரு கட்சியாவே மதிக்கலை" - விசும்பும் திருமாவளவன்
By : Mohan Raj
"காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகளை ஒரு அரசியல் கட்சியாக ஏற்கவில்லை என்பது போன்ற நிலையை உருவாக்குகிறது" என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர முன்னாள் மேயருமான மறைந்த மேயர் சிவராஜ் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் கூறியதாவது, "தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி ஏற்றும் இடத்தில் தடியடி நடத்தப்பட்டுள்ளது. எங்கள் கட்சியினர் மீதான நன்மதிப்பை களங்கப்படுத்தும் முயற்சி இது, காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகளை ஒரு அரசியல் கட்சியாக ஏற்கவில்லை என்பது போன்ற நிலையை உருவாக்குகிறது.
நாளுக்கு பிறகு முதல்வரை இது தொடர்பாக சந்தித்து பேச உள்ளோம் .எனவே நாளை , நாளை மறுநாள் சேலம் , மதுரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் முதல்வரின் சந்திப்பிற்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பலர் சாதிய எண்ணத்தில் செயல்படுகின்றனர்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ஆளும் தி.மு.க அரசின் முகமாக தான் காவல்துறை செயல்படுகிறது என எம்.பியாகிய திருமாவளவன் அவர்களுக்கு தெரியாதா என்ன?