ஒரு வழியாக முதல்வருக்கு ஞாபகம் வந்த டெல்டா மாவட்டங்கள் - மழை பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் குழு !
By : Mohan Raj
சென்னை பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வழியாக டெல்டா மாவட்டங்கள் நினைவுக்கு வந்துள்ளது. அதன் விளைவாக 1.25 லட்சம் ஏக்கர் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 6 அமைச்சர்கள் கொண்ட குழு உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் முதல் தமிழகத்தை மழை புரட்டிபோட்டு வருகிறது, குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மக்கள், பாசன வயல்கள், ஆறு, குளங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி தமிழகமே தத்தளித்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தின் விவசாய மையமாக விளங்கும் டெல்டா மாவட்டங்கள் நினைவிற்கு வந்துள்ளன. அதன் விளைவாக டெல்டா மழை சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் கொண்ட குழுவை தற்பொழுது அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, "கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நட வடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைத்து முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இந்தக் குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், எஸ். ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக முதல் அமைச்சருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகள் துவங்கி ஒருவார காலம் கழித்தாவது டெல்டா மாவட்டங்கள் முதல்வருக்கு ஞாபகம் வந்ததே!