அன்றைக்கு பா.ஜ.க உள்ளே வந்துடும் என வாக்கு கேட்டவர்கள் இன்று வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்து அமர வைக்கின்றனர் !

நேற்றைய கோவை அரசு நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களை முதல்வர் ஸ்டாலின் அழைத்து மேடையில் அமர சொன்ன நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறியதாவது, "இது கட்சி விழா கிடையாது. அரசாங்க விழா. சட்டமன்றத்தில் தொகுதி சார்பாக என்ன கேட்டேனோ, அப்போதே அதை முதல்வர் நிறைவேற்றுகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வந்திருக்கிறார். நான் இந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி. நடப்பது அரசு விழா. இப்படித்தான் அதைப் பார்க்கிறேன்.
ஆனாலும்கூட இதற்கான அழைப்பிதழ் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. கேட்டதற்கு அழைப்பிதழே அடிக்கவில்லை என்றனர். மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மூலம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருக்கிறோம் என்று என்னையும் அழைத்தனர். அழைப்பிதழ் கையில் இல்லை என்பது ஒரு மாதிரிதான் இருந்தது. 10 எம்.எல்.ஏ-க்களும் எதிர்க்கட்சி என்பதால், அவர்கள் பெயர்களைப் போட விரும்பவில்லை என்று புரிந்துகொண்டேன்.
தனிப்பட்ட அவமானங்களைக் கடந்து, என்னுடைய மக்களின் நலன் முக்கியம் என்பதால் கலந்துகொண்டேன். எனக்கு கீழேதான் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுடைய தொகுதியில் நடக்கும் ஓர் அரசு நிகழ்ச்சியில், என்னைக் கீழே அமரவைத்து நடத்துவதுதான் அவர்களின் அரசியல் நாகரிகம் என்று நினைத்துக்கொண்டு சென்றேன். முதலில் நாடு, பிறகுதான் கட்சி என்பதைப் பயின்று வந்தவள் நான்.
என் மனதில் வருத்தம் இருந்தது உண்மைதான். நான் கீழே அமர்ந்ததை அமைச்சர்கள் பார்த்து முதல்வரிடம் கூறினர். உடனே என்னை மேலே அழைத்து அமரவைத்தனர். இதை என் தொகுதி மக்களுக்குக் கிடைத்த மரியாதையாகத்தான் பார்க்கிறேன். தனியாக எனக்குக் கிடைத்த மரியாதையாக பார்க்கவில்லை. மக்கள் நலத் திட்டங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து, இதை இன்னும் மேம்படுத்துவேன்" என கூறினார்.
தமிழகத்தில் பெரும்பாலும் தற்பொழுதைய மக்களுக்கான தேவைகளுக்கு பா.ஜ.க'வே முதன்மையாக களத்தில் இறங்குகிறது, மேலும் பா.ஜ.க ஒரு விஷயத்தை கையில் எடுக்கிறது என்றால் ஆளும்கட்சி அதற்கு தனி கவனம் செலுத்துகிறது. பா.ஜ.க உள்ளே வந்துவிடும் என வாக்கு கேட்டவர்கள் இன்று பா.ஜ.க இன்றி அரசியல் செய்ய இயலாது என புரிந்துகொண்டனர்.