திருப்பூரில் மக்களே சாலையை சீர் செய்த அவலம் - கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

By : Mohan Raj
திருப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் மக்களே சாலையை தங்கள் சொந்த பணத்தில் சீர் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாநகராட்சியின் வி.ஜி.வி கார்டனில் நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அவ்வழியாக செல்லும் மண் ரோடு அவல நிலையில் உள்ளது. இந்த வழியாக காசிபாளையம் மணியகாரம்பாளையம் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு இடையில் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை பயன்படுத்த சரியாக இல்லாமலும், இருபுறமும் புதர் மண்டி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மழை போன்ற கடின காலங்களில் சாலையை பொதுமக்களால் பயன்படுத்த வழியின்றி மோசமாக உள்ளது. இந்த சாலையை மக்கள் பயன்படுத்த ஏதுவாக புதர்களை அகற்றி சரி செய்துதரவேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேறுவழியின்றி தாங்களாகவே பணம் செலவழித்து சாலை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அந்த பகுதிவாழ் பொதுமக்கள் கூறுகையில், "மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் நாங்களே வழித்தடத்தை செப்பனிட முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக 2 பொக்லைன் எந்திரங்களை கொண்டு செடி, கொடி, புதர்கள் அகற்றப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர். மக்கள் குறைகளை தி.மு.க களைந்து வருவதாக ஒருபுறம் விளம்பரப்படுத்தப்பட்டாலும் மறுபுறம் மக்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மக்களே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
