ஆன்மீகத்தை பழித்து பேசும் கட்சியால் கோவில்களை எப்படி பாதுகாக்க முடியும் - வானதி ஸ்ரீனிவாசன் சுளீர் !

ஆன்மீகத்தை பழித்து பேசு கட்சியால் கோவில்களை எப்படி பாதுகாக்க முடியும் என எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தில், 24- வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாசாரிய சுவாமிகளை பார்த்து பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் நேற்று ஆசிர்வாதம் வாங்கினார். பின்னர் பிரதமர் மோடியின் வாரணாசி திட்ட துவக்க விழாவை காணொளி காட்சி மூலம் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "ஆக்கிரமிப்புகளில் உள்ள ஆதீனங்களின் சொத்துக்களை மீட்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர வாய்ப்புகள் இல்லை. சொத்துக்களை பாதுகாக்க ஆதீனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம். தமிழ்நாட்டில், துரதிஷ்டவசமாக ஆன்மீகத்தைப் பழித்துப் பேசுகின்ற அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக அரசியல் அதிகாரத்தில் உள்ளனர். இதன் காரணமாக, பல்வேறு கோயில்களில் சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "தங்களுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாக சொல்கின்ற முதலமைச்சர், அமைச்சர்கள் எப்படி இந்தக் குறைகளை சரிசெய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் நிர்வாகத்தை தெய்வ நம்பிக்கை உடையவர்களிடம் தனியாக வாரியத்தை கொடுக்க வேண்டும். அப்படி வந்தால்தான் அனைத்துக் கோயில்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும்" என்றார்.