"பெண்களின் வாழ்வில் விடியல்" - திருமண வயது வரம்பு உயர்த்தியதை புகழ்ந்து தள்ளிய மரு.ராமதாஸ்

பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் சட்டம் என பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியதற்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 வயது ஆக இருக்கும் நிலையில், அதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான சட்ட மசோதா மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த சட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறித்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்ட அவர், "பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்தப் புரட்சிகர முடிவு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார்.உலக அளவில் இந்தியப் பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும் தான் காரணம் ஆகும்.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பதை பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.