"உதயநிதி அமைச்சராக வேண்டும்" - ஒரு முடிவோடு சுற்றும் தி.மு.க அமைச்சர்கள்

தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் மூன்றாவதாக விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக உழவர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது, "உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆறு மாத காலமாக சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வீடு வீடாக சென்று மக்களுக்கு சந்தித்து, ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி பணியாற்ற வேண்டும் என்று இளம் வயதில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். அவர் அமைச்சர் ஆக தகுதியானவர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் அந்தத் துறை வளர்ச்சி அதிகமாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதற்கு முன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி ஆகியோர் உதயநிதி அமைச்சராக வேண்டும் என குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடதக்கது. மக்கள் பிரச்சினைகள் பலநூறு இருக்க அதனை கவனிக்க வேண்டிய அமைச்சர்கள் உதயநிதியை அமைச்சராக்குவதில் கங்கனம் கட்டிக்கொண்டு குரல் எழுப்பி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.