பான் இந்தியா படமான 'புஷ்பா' மலையாளத்தில் ஏன் இன்று வெளியாகவில்லை? பரபரப்பு தகவல்!

இன்று பான் இந்தியா படமாக வெளியாக வேண்டிய 'புஷ்பா' தொழில்நுட்ப காரணங்களால் அதன் மலையாள பதிப்பு தயாராவதில் தாமதம் ஏற்பட்டதால் கேரளத்தில் வெளியாகவில்லை.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் 'புஷ்பா ; தி ரைஸ்' என்கிற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மலையாள பதிப்பு கேரளத்தில் மட்டும் வெளியாகவில்லை, இதனால் மலையாள அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என இப்படத்தின் ஒலிப்பதிவு பொறியாளர் ரசூல் பூக்குட்டி கூறுகையில், "இந்தப்படத்தின் ஒலிப்பதிவு பணிகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தியுள்ளோம்.. ஆனால், இந்த சாப்ட்வேரில் ஏற்பட்ட எதிர்பாராத பிழை காரணமாக அதன் அவுட் எடுக்கும்போது நாங்கள் எதிர்பார்த்த தரத்தில் பிரின்ட் எடுக்க முடியவில்லை. அதனால் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பிரிண்ட்டை கொடுக்க வேண்டும் என்பதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரிண்ட்டுகள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன" என கூறியுள்ளார். இதனையடுத்து 'புஷ்பா' மலையாள பதிப்பு நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.