அம்பேத்கரை அவமதித்த கட்சி காங்கிரஸ் - அமித்ஷா!

அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனோவில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் பேசியதாவது, "மன்னர் சிவாஜி தமது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்து சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு பயன்படுத்தினார். அம்பேத்கர் சிலையும் இன்று திறக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் வாழ்ந்தபோதும், இறப்பிற்கு பின்னரும் அவரை அவமதிக்கும் சந்தர்ப்பங்களை காங்கிரஸ் கட்சி தவற விட்டதில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், "அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மத்தியில் காங்கிரஸ் அல்லாத பிற கட்சி ஆட்சியின்போதுதான். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது வரை அதை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து வருகிறது" என குறிப்பிட்டார்.
இறுதியாக அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கான கூட்டுறவு திட்டத்தை நாங்கள் அமல் படுத்தவுள்ளோம் என அமித்ஷா குறிப்பிட்டார்.