சாதியை கூறி திட்டி, கழிவறையை கழுவ சென்ன அரசு பள்ளி தலைமை ஆசிரியை!

திருப்பூர் அருகே ஆதிதிராவிடர் மாணவி, மாணவர்களை சாதியை கூறி இழிவாக பேசி, கழிப்பறையை தலைமை ஆசிரியை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள இடுவாய் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 400 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் கீதா என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கல்வி அலுவலர் ரமேஷுக்கு ஒரு புகார் வந்தது அதில், "தலைமை ஆசிரியர் கீதா, மாணவ, மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், ஆதிதிராவிடர் மாணவர்களை வைத்து கழிப்பறை கழுவ வைத்ததாகவும்" அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் கல்வி அலுவலர் ரமேஷ் இடுவாய் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது ரமேஷ் அவர்களிடம் மாணவ, மாணவியர்கள் தலைமை ஆசிரியை கீதா நாய் என திட்டுகிறார் எனவும், சாதியை வைத்து இழிவாக பேசுகிறார் எனவும், கழிவறை சுத்தம் செய்ய சொல்கிறார் எனவும் வரிசையாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியை கீதா மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இதனையடுத்து இடுவாய் பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.