"சகோதரர் திருமாவளவனுக்கு மதமாற்றம் பற்றி புரியவைக்க வேண்டும்" - வானதியின் பக்குவம்!
By : Mohan Raj
அம்பேத்கரின் ஒரு சில கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒட்டு மொத்தமாக இந்திய திருநாட்டின் பாரம்பரியத்தையும், மரபுகளையும் அழித்தெடுக்க நினைக்கும் அளவிற்கு திருமாவளவனின் பேச்சுக்கள் இருக்கின்றன, இதுகுறித்து அவரிடம் நான் உரையாட விரும்புகிறேன்" என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அரசியல் முதிர்ச்சியோடு பக்குவமாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அரசியல் உலகில் சனாதன சக்திகளை ஒழிப்பேன், பா.ஜ.க மதவாத சக்தி, காவிக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என தொடர்ந்து பேசி வருகிறார் திருமாவளவன், அதுமட்டுமில்லாமல் திருவள்ளுவர் கிருஸ்துவர், இந்துக்கள் கோவிலில் ஆபாச சிலைகள் உள்ளன, தற்பொழுதுள்ள சிவன் கோவில்கள் அனைத்துத் புத்த விகாரைகளாக இருந்தன என்பது போன்ற இந்துமதத்தை அழித்தொழிக்கும் பேச்சுக்களையும் அவ்வபோது வன்மத்துடன் பேசி வருகிறார். இதுகுறித்து தனியார் சேனலுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டு பேசினார்.
அப்பொழுது வானதி அவர்கள் கூறியதாவது, "சகோதரர் திருமாவளவன் தனது காலத்திலேயே ஒரு கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்தவர், ஆனால் அம்பேத்கர் அவர்களின் ஒரு சில கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை வைத்து நம் தாய்நாட்டில் பாரம்பரியத்தையும், மரபுகளையும் அழித்தெடுக்கும் அளவிற்கு அவர் பேச்சுக்கள் இருக்கின்றன. அது குறித்து அவரிடம் நான் உரையாட விரும்புகிறேன். மத மாற்றத்தால் நம் நாடு, பண்பாடு, கலாச்சாரம் எவ்வாறு அழிந்துகொண்டிருக்கிறது என நான் அவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.
ஆன்ம எழுச்சி பற்றிய கோல்வால்கர் புத்தகங்களையும், சகோதரர் வெங்கடேசன் எழுதிய "இந்துத்துவ அம்பேத்கர்" புத்தகத்தையும் அவருக்கு பரிசளிக்க வேண்டும்" என்றார்.
மேலும், "சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதையும் கேட்டு அவற்றை பரிமாறி இவைகளை பற்றி விவாதிப்பேன்" எனவும் கூறியுள்ளார். அரசியலில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், விவாத திறன் இல்லாமலும் பல அரசியல்வாதிகள் மேடைகளில் அருவருப்பாக பேசி வரும் இந்த காலத்தில், தனக்கு உகந்த கொள்கைகளை எதிர் அணியில் இருக்கும் ஒருவருக்கு புரியும்படி விருந்து அளித்து விளக்குவேன் என பெண்ணாகிய வானதி சீனிவாசன் கூறியுள்ளது அரசியல் புரிந்தவர்களின் ஆதரவை பெற்றுள்ளது.