தோற்றுப்போன தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியத்துவம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா!
By : Thangavelu
தருமபுரி மாவட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ., கோவிந்தசாமி திடீரென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாமகவே வெற்றி பெற்றுள்ளது. அதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவை சேர்ந்த கோவிந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.
இதனிடையே தொகுதியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களை தொடக்கி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கோவிந்தசாமி எம்.எல்.ஏ., முன்வைத்துள்ளார். அதே போன்று கடத்தூரில் தார்சாலை அமைக்கும் பணிக்கு தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் வைத்து பூமி பூஜை போட்டுள்ளனர். அதே போன்று ஒன்றிய செயலாளர் மற்றும் பேரூராட்சி செயலாளர்களை வைத்து அரசு திட்டங்களை தொடங்கி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், நான் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். எந்த பணிக்காகவும் தன்னை மாவட்ட நிர்வாகம் அழைப்பதில்லை. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகத்தான் நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று கூறினார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Kathirnews