கொடுத்த ஒரு சீட்டையும் பிடுங்கிக் கொண்ட தி.மு.க.: அதிருப்தியில் கம்யூனிஸ்ட் கட்சி!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என்று ஒதுக்கப்பட்டது.
By : Thangavelu
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என்று ஒதுக்கப்பட்டது. இதனையும் சகித்துக்கொண்டு அக்கட்சியில் போட்டியிடும் நிலைக்கு கூட்டணி கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர். அதே போன்று கும்பகோணம் மாநகராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஒரு வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வார்டிலும் திமுகவின் வார்டு செயலாளர் சுயேச்சையாக போட்டியிடுவதால் வேறு வழியின்றி கம்யூனிஸ்ட் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் 7வது வார்டு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி முருகன் என்பவர் கடந்த 3ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே போன்று திமுக வார்டு செயலாளரான ரமேஷ்குமார் சுயேச்சையாக 7வது வார்டில் மனுத்தாக்கல் செய்தார்.
தன்னை திமுகவினர் வேண்டும் என்றே தோற்கடிக்க திட்டம் போட்டு இருப்பதை அப்போதுதான் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாரதி முருகன் உணர்ந்துள்ளார். இந்த சம்பவத்தை மாநில செயலாளர் முத்தரசன் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளார். அவர் திமுகவினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் உடனடியாக மனுவை வாபஸ் வாங்குமாறு கூறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி பாரதி முருகன் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஒரு வார்டு ஒதுக்கிய நிலையில் அதையும் திமுக பறித்துக்கொண்ட சம்பவம் அக்கூட்டணியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், திமுக மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar