அண்ணாமலை கேள்விக்கு டென்ஷனான ஸ்டாலின்

By : Mohan Raj
வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலேயே முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்து வாக்கு கேட்க வரவில்லை என அண்ணாமலை கூறிய புகார் முதல்வர் ஸ்டாலினை கோபப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த பத்து நாட்களாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது, பல கட்சி அரசியல் தலைவர்களும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தன. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவே இல்லை மாறாக காணொளி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்கள் மத்தியில் பேசும்போது இதை குறிப்பிட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை "தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலேயே முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்திக்க மறுத்து வருகிறார், எனவும் வாக்குறுதிகளை பற்றி மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்தினால் தான் நேரடி பிரச்சாரத்தில் இறங்க மறுக்கிறார்" எனவும் குற்றம் சுமத்தினார்.
முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும் பொழுது தமிழகத்தின் பல இடங்களில் வாக்குறுதிகள் என்னவாயிற்று என பெண்கள் கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தி.மு.க துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசும் பொழுது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்திக்க எனக்கு தைரியம் இல்லை என சிலர் கூறி வருகின்றனர் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் காரணமாகவே காணொளி வாயிலாக பரப்புரை மேற்கொண்டேன் தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்களை நேரில் சந்திப்பேன்" என்றார்.
தற்போது இருப்பதைவிட கொரோனா முதல் இரண்டு அலையின் பொழுது கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்தது அப்பொழுது ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு 'கிராமசபை கூட்டம்', 'ஒன்றிணைவோம் வா' என பல கூட்டங்களை நடத்தினார் ஆனால் அதை விட தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நேரத்தில் கொரோனா பரவலை காரணம் காண்பித்து மக்களை நேரில் சந்திக்காமல் ஸ்டாலின் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை மக்களின் குரலாக எழுப்பிய கேள்வி முதல்வரை உறுத்தியதால் இன்று திருமண விழாவில் இது குறித்துப் பேசியுள்ளார் முதல்வர்.
