பத்மநாபபுரம் சேர்மன் பதவி யாருக்கு - கடும் போட்டியில் பா.ஜ.க, திமுக

By : Mohan Raj
கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் சேர்மன் பதவி பா.ஜ.க'விற்கும், தி.மு.க'விற்கும் கடும் போட்டி ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருக்கிறார், இவரின் தொகுதியான பத்மநாபபுரம் நகராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க 7 வார்டுகளிலும், தி.மு.க 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் 6 வார்டுகளிலும், ஒரு வார்டில் ஜனதா தளம் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். தற்பொழுது சேர்மன் பதவிக்காக தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு நடுவே அங்கு கடும் போட்டி சூழல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் பத்மநாபபுரம் நகராட்சி 6 வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஜனதா தளத்தைச் சேர்ந்த நாதிரா பானு கூறுகையில், "எங்களுக்கு இந்த வார்டில் ஆதரவு தாருங்கள் சேர்மன் தேர்தலில் நாங்கள் ஆதரவு தருகிறோம் என தி.மு.க'விடம் பேசிப் பார்த்தோம், எங்களை மதிக்காமல் வேட்பாளரை இறக்கினார்கள், ஆனால் நாங்கள் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் இப்படி நாங்கள் வெற்றி பெறக் கூடாது என எண்ணிய தி.மு.க'வை எப்படி சேர்மன் ஆக்குவது என உறுதியாக நிற்கிறோம்" என்றார்.
தற்பொழுது பெரும்பாலான இடத்தில் சேர்மன் பதவிக்கு தி.மு.க வெற்றி பெற்றிருப்பதால் பத்மநாபபுரம் பகுதி சேர்மன் பதவியை தி.மு.க தக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில் முட்டி மோதுகிறது, ஆனால் சரிசமமாக வார்டு மெம்பர்களை பெற்ற பா.ஜ.க'வோ பத்மநாபபுரம் சேர்மன் பதவி விடக்கூடாது என தீர்மானமாக உள்ளது. யாருக்கு சேர்மன் பதவி என பொறுத்திருந்து பார்ப்போம்!
