"வீடு மத்திய அரசு திட்டம்'தான், ஆனா கொடுத்தது நாங்கதான்" - புது விளம்பரப் படத்தை வெளியிட்ட தி.மு.க

By : Mohan Raj
மத்திய அரசின் "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா" திட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டை தமிழக அரசு வழங்கியதாக சிறுவன் அப்துல் கலாமை வைத்து தி.மு.க மேலும் ஒரு விளம்பர படத்தை வெளியிட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பள்ளி சிறுவன் ஒருவர் மனித நேயம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது, அதில் தொகுப்பாளர் "நீங்கள் யாரை அதிகம் வெறுக்கிறீர்கள்?" என்ற கேள்வியை கேட்கிறார், அதற்கு பதிலாக அந்த சிறுவன் "யாரையும் வெறுக்காதே, பலர் என் பல்லை வைத்து கிண்டல் செய்வார்கள் நான் ஏன் அவர்களை வெறுக்க வேண்டும் எல்லோரும் எனக்கு நண்பர் மாதிரி நான் ஏன் பிரிந்து இருக்க வேண்டும்?" என கூறுவதாக அந்த வீடியோ வலம் வந்தது. மேலும் அந்த சிறுவனின் பெயர் அப்துல் கலாம் எனவும் தெரியவந்தது. இந்த வீடியோவை மன்னார்குடியை சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ'வும், தி.மு.க'வின் ஐ.டி விங்க் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டரில் பகிர்ந்தார்.
பின்னர் அந்த வீடியோவை சொல்லி வைத்தார் போல் தி.மு.க'வில் உள்ள சிலரும் தி.மு.க சார்பு இணையவாசிகள் அனைவரும் ஆஹா ஓஹோவென புகழ்ந்தனர், பின்பு வீடியோ வெளியிட்ட அடுத்த நாளில் சிறுவனின் தாயார், "தற்போது தங்கியுள்ள வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறுகிறார் எனவே நாங்கள் என்ன செய்வது தெரியவில்லை" என புலம்பும் வீடியோவும் வெளியானது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி தமிழக முதல்வர் சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார், பின்னர் மறுநாள் பிப்ரவரி 25'ஆம் தேதி சென்னை புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்துல்கலாமுக்கு உதவித் தொகையாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதனையடுத்து சென்னை கே.கே நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தில் சிறுவனின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார்.
அதுவரை இது நாடகமா என யோசித்து வந்த நிலையில் அப்பொழுதுதான் அது நாடகம் தான் என அம்பலமாகியது. காரணம் அந்த சிறுவனுக்கு ஒதுக்கப்பட்ட வீடு நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்குவதற்காக இந்திய அரசின் திட்டமான "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா" அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது என்பது அம்பலமாகியது, மேலும் இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த வீட்டிற்கான நிதி ஒதுக்கப்பட்டது தெளிவாகியது.
முன்பு நரிக்குறவ இன பெண் தற்போது இந்த சிறுவன் அப்துல்கலாம் இப்படி "ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்" என்ற ஒரே திரைக்கதையை வைத்து தி.மு.க தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டு செய்து விளம்பர ஆட்சி என அவ்வப்போது நிரூபித்து வருகிறது.
