தமிழ்நாட்டுக் கல்வியை சீரழித்தது யார்? முதலமைச்சர் கேள்விக்கு இந்து முன்னணி தலைவர் அறிக்கை!
By : Thangavelu
கோவையில் நேற்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கல்வி மாநில அரசின் பட்டியலில் வரவேண்டும் என்று கூறினார். மேலும், மத்திய அரசு பிற்போக்குத்தனத்தை கல்வியில் புகுத்துவதை தடுக்க வேண்டும் என்று கூறியது நகைப்புக்குரியது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியில் சிறந்த தமிழ்நாடு என பாரதி ஓங்கி குரல் கொடுத்து பாடினார். அது அந்தக் காலம். கல்வி நிறுவனங்கள் பல்கி பெருகுவதற்கு முன்னரும் கூட தமிழர்கள் இந்திய அளவில் கல்வியால் புகழ்பெற்று விளங்கினார்கள். நீதித்துறை, பாராளுமன்றம், பல்கலைக்கழகம், மருத்துவத்துறை, விண்வெளி ஆராய்ச்சி என எல்லாவற்றிலும் முன்னணியில் இருந்ததுடன், எல்லா இடங்களிலும் தமிழனுக்குத் தனி மரியாதை இருந்தது.
ஆனால், நீட் தேர்வை எங்கள் மாணவர்களால் எழுத முடியாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்காக கொடி பிடித்து மாணவர்களை அவமானப்படுத்துகிறார் மாநில அரசின் முதலமைச்சர். மருத்துவ நுழைவு தேர்வையோ, புதிய கல்விக் கொள்கையையோ எந்த மாநில அரசும் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காத நிலையில் தமிழக அரசு மட்டும் கூறி வருகிறது.
மத்திய அரசு செயல்படுத்தும் எந்த நல்ல திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு எடுப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை அரசியல்வாதிகளால் கொண்டு வரப்பட்டது அல்ல, அது கல்வியாளர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் உலக தரத்திற்கு இந்திய மாணவர்கள் முன்னேற முடியும் என்பது கல்வியாளர்கள் கருத்தாக இருக்கிறது.
மாநில அரசின் பாடத்திட்டம் தற்கால கல்வி நிலைக்குப் போதுமானதாக இருக்கிறதா? என்பதை தமிழக முதல்வர் கல்வியாளர்களை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்யட்டும். மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் கல்வியை ஏதோ வேலைக்கான சான்றிதழுக்கான கருவியாக பயன்படுத்துவது சரியானதா? என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும். தமிழக முதல்வர் எதனை பிற்போக்குத்தனம் என சுட்டிக்காட்டுகிறார்? என்ற கேள்விக்கு மக்களிடம் பதில் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Facebook