தி.மு.க அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்

By : Mohan Raj
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆனால் ஆளும் தி.மு.க அரசு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறாமல் இருக்க பல முட்டுக்கட்டைகளை போட்டு அவர்களை அவஸ்த்தைப்படுத்தியது.
கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் திருப்பூரில் மாநாடு நடத்தியது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதில் முக்கிய கோரிக்கையாக மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கடுமையான மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 1500 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் வகைப்படுத்தப்பட்ட ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர், அதற்காக சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தனர். அதன்படி இன்று காலை சேப்பாக்கத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் தலைமை செயலகம் செல்வதற்காக சென்னை சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட பொழுது அனைவரையும் எழிலகம் முன்பே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர், மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களையும் தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், "தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை தமிழகம் முழுவதும் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் அவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்" என்றார்.
