போலியான தகவல்களை கொடுத்த தி.மு.க கவுன்சிலரை பதவி நீக்கம் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி

By : Mohan Raj
தஞ்சை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் ஒருவர் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை செய்து வருவதை மறைத்து போலி தகவல்கள் அளித்த காரணத்தினால் கவுன்சிலர் தகுதியை இழந்துவிட்டதாக பதவி பறிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம் இவரின் அக்கா மகன் அண்ணா.பிரகாஷ் தஞ்சாவூர் மாநகராட்சி 16-ஆவது வார்டு தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்து வந்தார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடியவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்கக்கூடாது மாநகராட்சி மூலம் வருமானம் ஈட்டக்கூடிய எந்த வேலையும் செய்திருக்க கூடாது என்பது தேர்தல் அடிப்படை விதி.
அண்ணா.பிரகாஷின் உடன் பிறந்த தம்பி ராம்பிரசாத் அரசு ஒப்பந்தகாரராக இருந்து வருகிறார், அவர் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார் பிரகாஷ் தன்னுடைய வேட்புமனுவில் அதனை மறைத்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலராக பதவி வகித்து வந்தார். இது குறித்து விவரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலராக அலுவலராக செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆணையருமான சரவணகுமாருக்கு தெரியவந்த நிலையில் அண்ணா.பிரகாஷ் மற்றும் அவரது தம்பி ராம்பிரசாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அண்ணா.பிரகாஷ் மற்றும் அவரது தம்பி ராம்பிரசாத் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காத காரணத்தினால் அண்ணா பிரகாஷ் கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க'வினர் ஒருவர் பதவியை இழந்து இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் கூறும்போது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுபவர் மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்கக் கூடாது அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கடைகளை டெண்டர் எடுத்து நடத்தக்கூடாது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாநகராட்சி சார்பில் வருமானம் ஈட்டக்கூடிய எந்த வேலையும் செய்திருக்கக் கூடாது ஆனால் இந்த தகவலை மறுத்த காரணத்தினால் அண்ணா.பிரகாஷ் கவுன்சிலராக பதவி வைப்பதற்கான தகுதி இழந்துவிடுகிறார்" என தெரிவிக்கப்பட்டது.
