பொருளாதார குழு செய்தது என்ன? தற்போது கல்வி கொள்கையை வடிவமைக்க புதிய குழு!
By : Mohan Raj
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பொருளாதார வல்லுனர்கள் குழு என்ன செய்தது என தெரியாமல் நிற்கும் நிலையில் தற்பொழுது மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுனர் குழுவை மீண்டும் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர் வல்லுனர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார், உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
12 பேர் கொண்ட அந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எல்.ஜவகர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனிவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைகலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 12 பேர் கொண்ட குழு புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார ஆலோசனை முதலமைச்சருக்கு வழங்க இதுபோல் ஒரு குழு அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அந்தக் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர்.டப்லோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் ஜீன் ட்ரெஸ், மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த பொருளாதார வல்லுனர் குழுவினர் எந்த அறிக்கை கொடுத்தார்கள்? என்ன சமர்ப்பித்தார்கள்? என்ன ஆலோசணை கூறினார்கள் என தெரியாத நிலையில் புதிதாக ஒரு வல்லுனர் குழுவை அமைத்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவும் தி.மு.க அரசின் அடுத்த கண்துடைப்பு என தெரிகிறது.