பரபரப்பான சூழலில் அமித்ஷாவை சந்திக்க கிளம்பிய ஆளுநர் - பின்னணி என்ன?
By : Mohan Raj
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கடந்த சில மாதங்களாக தி.மு.க அரசு குற்றம் சட்டி வருகிறது, மேலும் அண்மையில் மக்களவையில் இது குறித்து பேசிய டி.ஆர்.பாலு அவர்கள் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களை சட்டப்பேரவை ஒப்புதல் அளித்த மசோதா இன்னும் கிடப்பில் உள்ளது, மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கிய பணி' என்று நாடாளுமன்றத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடாளுமன்றத்தில் ஆளுநரை திரும்பப் பெறக் கோரி தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி'க்கள் அவையில் முழக்க போராட்டம் நடத்தினர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா'வை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பாக உரையாடியதாக செய்திகள் ஆளும் தி.மு.க அரசு தரப்பில் கூறப்பட்டது. இது மட்டுமல்லாது சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசின் முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் புகார் அறிக்கை ஒன்றை அளித்தார் இது குறித்தும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். தமிழக அரசின் அழுத்தம் மற்றும் தமிழக அரசின் மீதான புகார்கள் அதிகம் எழுந்துள்ள நிலையில் ஆளுநரின் இந்த டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவிருக்கிறார்.