இனி அரசியல் பேசினால் நடவடிக்கை பாயும் - ரசிகர்களுக்கு விஜய்யின் திடீர் எச்சரிக்கை
By : Mohan Raj
அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை கூற கூடாது என தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கட்டளையிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டது, அப்படி போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர் விஜய் மக்கள் மன்றத்தை சார்ந்தவர்கள். மேலும் விஜய் தனது நடவடிக்கைகளில் அவ்வப்பொழுது அரசியல் கலந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அரசு பதவிகளில் உள்ளோர்கள், அரசியல் கட்சித் தலைவர்களையும் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தி, அசிங்கப்படுத்தும் விதமாக இணையதளங்களிலும், போஸ்டர்களிலும் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ பதிவுகள் வெளியிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர், 'இதனால் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு முழுக்க அறிவுறுத்தி இருந்தும் அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம், இருப்பினும் நம் விஜய் அவர்களின் அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் அவர்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் உத்தரவின் பேரிலேயே ரசிர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' பட டிரைலர் குறித்து அரசியல் கட்சியை சம்பந்தப்படுத்தி விஜய் ரசிகர்கள் சிலர் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.