இனி தி.மு.க'வில் ஒருவருக்கு ஒரு பதவி - ஐ.பெரியசாமி போட்ட பிள்ளையார்சுழி, கலக்கத்தில் உடன்பிறப்புகள்
By : Mohan Raj
தி.மு.க'வில் இனி ஒருவருக்கு ஒரு பதவி என்பதை விரைவில் அமல்படுத்த தீவிர வேலைகள் நடப்பதாக தகவல் பரவியதால் உடன்பிறப்புகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க'வில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை தனது தொகுதியான ஆத்தூரிலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்த நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க'வின் மூத்த நிர்வாகியும் அமைச்சருமான ஐ.பெரியசாமி கடந்த தி.மு.க ஆட்சி காலங்களில் பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். தற்பொழுது தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த வருடம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் திலகபாமா'வை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் தட்டினார் ஐ.பெரியசாமி.
இந்நிலையில் தற்பொழுது கட்சி மற்றும் ஆட்சி அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே இருப்பதை விரும்பாத ஐ.பெரியசாமி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் தலைவராக இருப்பவர்கள் செயலாளராக இருப்பதை தவிர்க்கும் விதமாக தனது தொகுதியான ஆத்தூரில், அய்யம்பாளையம் பேரூர் செயலாளராக செயல்பட்டு வரும் தனது உறவினரான ஐயப்பனை பதவியை ராஜினாமா செய்ய வைத்து தங்கராஜ் என்பவருக்கு பேரூர் பொறுப்பாளர் பதவி வழங்கி உள்ளார்.
இதேபோல் கன்னிவாடி பேரூர் செயலாளர் சண்முகத்திற்கு பதில் இளங்கோவன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி ஆத்தூரில் தனது ஆட்டத்தை தொடங்கி வைத்துள்ள ஐ.பெரியசாமி தேனி மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவராக செயல்படும் தி.மு.க செயலாளர் பதவி வேறு ஒருவருக்கு வழங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் இடையே பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல பிற மாவட்டங்களில் உள்ள தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது, காரணம் தி.மு.க'வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த தேனி மாவட்டத்தை முதன்மையாக வைத்து தலைமை பரிசோதித்து பார்க்கிறதோ? என்ற ஐயமும் தி.மு.க'வினர் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி பரிசோதித்துப் பார்க்கும் பொழுது தேனி மாவட்டத்தில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற செயல்பாடு வெற்றிதரும் பட்சத்தில் இது பிற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் எனவும் சந்தேகப்பட வைத்தது பல தி,மு.க'வினரை, இதனாலேயே பல தி.மு.க நிர்வாகிகளில் இரு பதவியை அனுபவித்து வருபவர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.