ரேஷன் கடையில் இருந்த பிரதமர் மோடி படத்தை வீசி எறிந்த தி.மு.க'வினர் - திருச்சியில் பரபரப்பு
By : Dhivakar
திருச்சி: பெண்ணகரத்திலுள்ள நியாய விலை கடையில், பிரதமர் மோடியின் படத்தை மாட்டுவது குறித்து தி.மு.க மற்றும் பா.ஜ.க'வினர் இடையே கடும் மோதல் முற்றியது.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கோவை மாவட்டத்தில் ஒரு நியாய விலை கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாற்றி, பொதுமக்கள் மத்தியில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில், மத்திய அரசின் முன்னெடுப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து, தமிழகத்தில் பல அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பா.ஜ.க'வினர் மாட்டுவதும், அதை எதிர்த்து ஆளும் கட்சியான தி.மு.க;வினர் எதிர்ப்பதும் தொடர்ந்து வருகிறது.
இதன் வரிசையில், திருச்சி பெண்ணகரத்திலுள்ள அமராவதி நியாய விலை கடையில், அப்பகுதி பா.ஜ.க முக்கிய புள்ளியான பரமசிவம் மற்றும் பா.ஜ.க'வினர் சிலர், நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர்.
.
இச்செய்தியை அறிந்த அப்பகுதி தி.மு.க'வினர் மற்றும் தி.மு.க கவுன்சிலரான ராமதாஸ், நியாய விலை கடைக்கு விரைந்தனர். இதனையடுத்து இரு கட்சியினருக்கும் வாக்குவாதம் முற்றியது. " அனுமதி வாங்காமல் எப்படி பிரதமர் புகைப்படத்தை நீங்கள் நியாய விலை கடையில் மாட்டலாம் ?" என்று தி.மு.க'வினர் பா.ஜ.க'வினரை நோக்கி கேள்விகளை எழுப்பினர். "இதற்கு ரேஷன் கடைகளில் பிரதமர் புகைப்படத்தை வைக்க எல்லா உரிமைகளும் இருக்கிறது" என்று பா.ஜ.க'வினர் தரப்பு பதிலடி கொடுத்தது.
ரேஷன் கடையில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் புகைப்படத்தை தி.மு.க'வினர் எடுத்து வீசி எறிந்து உடைத்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் கைகலப்பு முற்றவே, சம்பவ இடத்திற்கு கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதே மாதிரியான சம்பவங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்க வாய்ப்பு இருப்பதால், இப்பிரச்சனை தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.