ஈ.வி.கேஎஸ் இளங்கோவன் விமர்சிக்க, கி.வீரமணி கைதட்ட, இதுதான் முறையா? - இளையராஜா விவகாரத்தில் பா.ரஞ்சித் கூறியதென்ன?
By : Dhivakar
திராவிட கழகப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இசைஞானி இளையராஜாவை தரக்குறைவாகவும் ஒருமையிலும் விமர்சித்தார். இவரது விமர்சனத்திற்கு திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் பதிலடி கொடுத்துள்ளார்.
புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனத்தின் , 'மோடியும் அம்பேத்கரும், சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்' என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளிவந்தது. புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இசைஞானி இளையராஜா " மோடி அம்பேத்கருக்கு இணையானவர். அவரது திட்டங்கள் பல அம்பேத்கரின் சிந்தனைகளை கொண்டவை. மோடி அரசால் நடைபெற்ற சமூக மாற்றத்தை பார்த்து அம்பேத்கர் பெருமைபட்டிருப்பார்" என்று பிரதமர் மோடி குறித்து பெருமையாக எழுதியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் கருத்திற்கு எதிர்வினையாக, தமிழகத்தில் பா.ஜ.க'வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளும், இடதுசாரி மற்றும் திராவிட சித்தாந்தம் கொண்ட பலர், இசைஞானியை தரக்குறைவாக விமர்சனம் செய்தனர்.
இதன் வரிசையில், கி வீரமணி முன்னிலையில் திராவிட கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இளையராஜாவின் மோடி ஆதரவு நிலைப்பாடு குறித்து விமர்சித்தார். அவர் கூறியதாவது " வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும், புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்து கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்!" என்று பேசினார்.
இவரது பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இது குறித்து, திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் டுவிட்டரில்" பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி.வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது. என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று போற்றப்படும் இசைஞானி இளையராஜாவை, பொது வெளியில் தரக்குறைவாக பலர் விமர்சிக்கும் போக்கை , தமிழ் சினிமாவின் பல முக்கிய புள்ளிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியதாகும்.