"சிவனை இகழ்ந்தவனை கைது செய்!" - தமிழக அரசை நோக்கி கொந்தளிப்பில் ஹெச் ராஜா!
By : Dhivakar
சிவபெருமானின் அற்புத தோற்றமான தில்லை நடராஜரை, யூடியூபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து பேசியதையடுத்து, அவர் மீது வழக்குகளும் கண்டனங்களும் பாய்ந்து வருகிறது.
'மைனர் விஜய்' என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திக் கொண்டுவருகிறார். திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனைகள் சார்புடைய அச்சேனலில், வலதுசாரி மற்றும் தமிழ்தேசிய சித்தாந்தங்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது மைனர் விஜயின் வழக்கம்.
இதன் வரிசையில், இரண்டு நாட்களுக்கு முன்பு " நடராஜர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம்! " என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தில்லை நடராஜர் சிலையின் தோற்றம் குறித்து, ஆபாசமாக தவறான தகவல்களை சித்தரித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்துத் தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில், 'மைனர் விஜய்' மற்றும் அவரது யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னையிலுள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்படி நாளுக்கு நாள் இச் சர்ச்சை பெரிதாகி கொண்டிருக்கும் வேளையில், தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா, இச் சர்ச்சை குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார், அதில்: தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. சிவனை இகழ்ந்தவனை தமிழக அரசே உடனே கைது செய்.
என்று பதிவிட்டுள்ளார்.இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இப்படி பல்வேறு திசைகளிலிருந்து கைது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இதை செவிசாய்த்து தமிழக காவல்துறை 'யூடியூபர் மைனர் விஜய்' மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.