முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆட்சி அகல அனுமன் கோயிலில் சிறப்பு வழிபாடு!
By : Thangavelu
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் நேற்று, அனுமன் சாலிஸா துதி பாடியபடி ராணா தம்பதி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த மாதம் முதலமைச்சர் வீட்டு வாசலில் அனுமன் சாலிஸா துதியை பாடப்போவதாக சுயேச்சை பெண் எம்.பி. நவ்நீத் ராணாவும், அவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ., அறிவித்தனர். இதனால் அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இரண்டு வாரத்திற்கு பின்னர் சிறையில் இருந்த அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் நிபந்னையுடன் ஜாமீன் வழங்கியது. இருவரும் வெளியில் வந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி சந்திப்பதற்காக ராணா தம்பதி டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தங்களுக்கு சிறையில் இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து பேசுவதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் ராணா தம்பதி நேற்று (மே 14) சிறப்பு வழிபாடு நடத்தினர். அவர்களுடன் ஆதரவாளர்களும் பங்கேற்றனர். அப்போது அனைவரும் அனுமன் சாலிஸா துதியை பாடினர். அது மட்டுமின்றி செய்தியாளர்களை சந்தித்த ராணா தம்பதி, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மாநிலம் ஆபத்தில் இருந்து விலகவே தற்போது இந்த பூஜையில் ஈடுபட்டோம் என்றனர்.
Source, Image Courtesy: Dinamalar