இந்துக் கடவுளை இழிவுபடுத்தியவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கேள்வி!
By : Thangavelu
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை அளிக்கப்பட்டுள்ளது. சமயச் சுதந்திர உரிமை என்பது, தனி நபர்கள் அல்லது சமூகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும் சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுவதும், அது குறித்து அரசு வாய்மூடி மவுனியாக இருப்பதும் வேதனையளிக்கிறது.
எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இதற்கு எதிரான சூழ்நிலை நிலவுவதும், அரசு மௌனம் காப்பதும் வேதனை அளிக்கிறது.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 25, 2022
இது மத மோதல்கள் உருவாக வழிவகுக்கும் என்பதால், அரசு இதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்க! pic.twitter.com/7ZORcxwEXP
முருகப் பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனை இருந்தாலும், அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் தனது தனித் தன்மையால் சிறந்து நிற்பது கந்த சஷ்டி கவசம் ஆகும். ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட கந்தர் சஷ்டி கவசத்தை, பாம்பன் சுவாமிகள் அவர்களால் அடிக்கடி மனம் உருகி பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை 2020 ஆம் ஆண்டு, இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டம் என்னும் யூ டியூப் சேனல். இது தொடர்பாக புகார் வந்தவுடன், கருப்பர் கூட்டம் நெறியாளரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததோடு, இதற்கு போட்டியாக இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி பேசிய இந்து தமிழ் பேரவையைச் சேர்ந்தவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தது அ.தி.மு.க. அரசு. இது தவிர பிற நபர்களின் மீதும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்து இருக்கிறது இந்தக் கூட்டம். கடலூர், மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நடராஜர் மற்றும் தில்லைக்காளி குறித்து மைனர் விஜய் என்பவர் யூ2 புருட்டஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனைக் கண்டித்தும், சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம் குறித்து அவதூறான கருத்தைப் பரப்பிய மைனர் விஜயை கைது செய்யக்கோரியும் வலியுறுத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிதம்பரத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையைப் பின்பற்றும் இயக்கமான அதிமுக பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி பேசினாலும் அதை அதிமுக எதிர்க்கும். முதலமைச்சர் என்பவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை முதலமைச்சர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் செயல்படுகின்ற ஆட்சி என்று அடிக்கடி சொல்லும் முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. கடவுள்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று அடிக்கடி சொல்லும் முதலமைச்சர் அவர்கள், தி.மு.க.வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் முதுலமைச்சர் அவர்கள், இந்து கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியோடும், வேதனையோடு மக்கள் பார்க்கிறார்கள். எனவே இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source:Twiter
Image Courtesy: Deccan Herald