மாமன்றமா அல்லது கேளிக்கை மண்டபமா? கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. கண்டனம்!
By : Thangavelu
கோவை மாநகராட்சி மாமன்ற வளாகத்தில் மேற்கு மண்டல தலைவர் பிறந்த நாள் விழாவுக்காக கேக் வெட்டி கொண்டாடியுள்ள சம்பவத்திற்கு அ.தி.மு.க. கடுமையான கண்டனங்களை கூறியுள்ளது. அதாவது பொதுமக்களின் எதிர்ப்பு தெரிவித்த சொத்து வரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
மேற்கு மண்டல தலைவர் தெய்வயானைக்கு பிறந்த நாள் எனுபதால், மாமன்றத்தில் கவுன்சிலர் ஒருவர் அறிவிப்பு செய்தார். இதனால் அவருக்கு அங்கிருந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மன்ற கூட்டத்துக்கு கேக் வரவழைக்கப்பட்டு மேயர் கல்பனா, கமிஷ்னர் ஷர்மிளா, உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலையில் கேக் வெட்டிய தெய்வானை மேயருக்கு ஊட்டியுள்ளார். இது பற்றி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அம்மன் அர்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி விக்டோரியா நினைவாக கடந்த 1892ம் ஆண்டில் கோவை மாநகராட்சி மாமன்றம் கட்டப்பட்டது. அதன் பின்னர் மாநகராட்சி கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் எத்தனையோ பிரமுகர்கள் கலந்து கொண்டு திட்டங்களை தீட்டிய இடமாக மாமன்றம் பார்க்கப்படுகிறது.
இதனிடையே மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை பிறந்த நாளை, தி.மு.க. மேயலர் தலைமையில் அதுவும் கமிஷனர்கள் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் இடமா அல்லது கேளிக்கை நிகழ்ச்சி நடத்துகின்ற ஆடம்பர மண்டபமா? சொத்து வரியை உயர்த்திவிட்டு மக்களுடைய கஷ்டங்களை உணராமல் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar