தந்தூரி சிக்கன் சாப்பிட்டு உயிரிழந்த மாணவர்: களத்தில் இறங்கிய இந்து முன்னணி!
By : Thangavelu
ஆரணி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன், இவர் தனியார் பள்ளி நிர்வாகி இவரது மூத்த மகன் திருமுருகன் 17, ஆரணி சேத்துப்பட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து நண்பர்களுடன் திருமுருகன் அசைவ ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அங்கு மாணவன் திருமுருகன் கடையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மறுநாள் காலை அந்த மாணவனுக்கு வாந்தி ஏற்பட்டு கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
#ஆரணி
— Hindu Munnani (@hindumunnaniorg) June 2, 2022
மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்..
தந்தூரி சிக்கன் சாப்பிட்டு தொற்று ஏற்பட்டு மாணவர் மரணம்..
ஆதரவாக களமிறங்கிய இந்துமுன்னணி...
#HinduMunnani #இந்துமுன்னணி pic.twitter.com/MCIHyzY3eD
இதனை தொடர்ந்து மாணவனின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்ற உறவினர்கள் போலீசாருக்கு சொல்லாமலேயே அவசர அவசரமாக உடலை தகனம் செய்துள்ளனர். இதன் பின்னர் மாணவன் உயிரிழப்புக்கு தந்தூரி சிக்கன் சாப்பிட்டதாலேயே என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 2) மதியம் ஆரணிக்கு வருகை புரிந்த இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் பா.ஜ.க.வினர் டவுன் காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர்களுடன் மாணவன் திருமுருகனின் தந்தை கணேஷ் வந்திருந்தார். அவர்களுடன் இணைந்து எஸ்.ஐ. கந்தரேசனிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில் தனது மகனின் இந்நிலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கூறி கதறி அழுதார். அப்போது அவர் கூறுகையில், எனது மகன் கடந்த 24ம் தேதி மதியம் நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள 5 ஸ்டார் எலைட் அசைவ ஓட்டலுக்கு சென்றுள்ளான். அங்கு பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளான்.
மற்றவர்கள் பிரியாணி மட்டும் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் எனது மகனுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தோம். மறுநாள் தொடர்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுவலி அதிகரிக்க தொடங்கியது.
மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்கேன் எடுத்தோம். அப்போதுதான் அவனுக்கு புட் பாஸ்சன் ஆகியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவன் இறந்து விட்டதாக கூறினர். அதன் பின்னர் எனது மகனை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். ஓட்டலில் சிக்கன் சாப்பிட்டு விஷம் ஏறிய நிலையில் அவனை உடனடியாக தகனம் செய்துவிட்டோம். எனது மகனுக்கு நேர்ந்த கதி இனி யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார். இந்த சம்பவத்தின்போது இந்து முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Twitter
Image Courtesy: One India Tamil