Kathir News
Begin typing your search above and press return to search.

போராடும் செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

போராடும் செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  14 Jun 2022 12:03 PM GMT

கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவத் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 2015ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அருகே, ஜூன் 7ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வலுகட்டாயமாக தி.மு.க. அரசு கைது செய்துள்ளது.

பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த தனி துறை உருவாக்கப்பட வேண்டும், 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படியை சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும், மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் பேச்சு நடத்தி, பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. அதுதான் ஜனநாயகம். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இதனைத்தான் வலியுறுத்தியது. அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு ஆதரவளித்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், செவிலியர்களின் கோரிக்கைள் நிறைவேற்றப்படும் என, தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தி.மு.க. ஆடசியில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராடிய செவிலியர்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டுள்ளது.

அதுபோல, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தாமல், வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் கிடையாது என, தொழிலாளர் விரோதப்போக்குடன் தி.மு.க. அரசு நடந்து கொள்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது நடப்பது, ஜனநாயக ஆட்சிதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மாண்புமிகு முதலமைச்சரும், மாண்புமிகு அமைச்சர்கள் தங்களால் தயாரிக்கப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையை மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து, அதனை நிறைவேற்ற வேண்டும். போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடாமல், சம்பளம் பிடித்தம் போன்ற தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடிக்காமல், பேச்சு நடத்தி, அவர்களின் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். முதலமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Twitter

Image Courtesy: Nakkheeran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News