அதியமான் மன்னர் கட்டிய கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர் கட்டிய வணிக வளாகம்? மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
By : Thangavelu
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள புராதன சின்னமான சென்றாய பெருமாள் கோயிலை மறைத்து தொல்லியல் துறை விதிகளை மீறி தி.மு.க. நிர்வாகிகள் வணிக வளாகங்கள் கட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் புயலை கிளப்பியுள்ளது.
தருமபுரி அதியமான் கோட்டை கோயில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னமான சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலை மறைத்து விதிகளை மீறி தி.மு.க., நிர்வாகிகள் வணிக வளாகம் கட்டியுள்ளதாக தமிழக மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் மகாலிங்கம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அதியமான்கோட்டையில் தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் பைபாஸ் சாலையில் 8-வது கிலோமீட்டரில் வள்ளல் அதியமான் நினைவு சின்னமாக 3 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 வருடங்கள் பழமையான பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது.
இந்த இடம் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது ஆகும். தற்போது இந்த இடம் முழுவதும் சுற்றுச்சுவர் கட்டியதோடு, கோயிலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொல்பொருள் ஆய்வுத்துறை கோவிலை சுற்றிலும் நான்கு புறமும் 300 மீட்டர் நிலத்திற்கு எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது என்றும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு கூடாது என்றும் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
மேலும், கோயிலை பராமரிக்க கோயிலுக்குள்ளே தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகமும் அமைக்கப்பட்டு அங்கு ஒரு ஊழியரும் உள்ளார். இந்த தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தலைமை அலுவலகம் சேலம் ஆகும். இப்படிப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயில் மட்டுமின்றி அதியமான் என்ற மாபெரும் மன்னர் ஆண்ட பூமியில், ஒரே ஒரு தொன்மையான கோயில் என்றால் அது கோட்டை கோயில் என்றழைக்கப்படும் அருள் மிகு சென்றாய பெருமாள் திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோவிலில் இருந்து தருமபுரியில் இருக்கும் கோட்டை கோயில் முதல் மைசூர் வரையிலும் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அதை அப்போது ஆண்ட அதியமான் மன்னர் பயன்படுத்தியதாகவும், இப்பகுதியில் உள்ள முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த இடத்தை ஆக்கிரமித்து சென்றாய பெருமாள் சுற்றுச்சுவரை ஒட்டியதுபோன்று தருமபுரி முதல் சேலம் தார்சாலைக்கு அருகாமையில் இரண்டு, மூன்று அடுக்கு வளாகங்கள் கோயில் இருப்பதே தெரியாத அளவிற்கு வளர்ந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அங்கு கட்டுமானப்பணிகளும் கோயிலின் முன்புறமும், பின்புறமும் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவிலை சுற்றி 300 மீட்டர் சுற்றளவுக்கு எந்தவொரு கட்டிடமோ குறைந்த பட்சம் குழி கூட வெட்டக்கூடாது என்பது தொல்லியல் துறையின் விதி ஆகும். ஆனால் கட்டுமான பணிகளை செய்வதாக உள்ளூர் மக்கள் சேலம் தொல் பொருள் ஆய்வுத்துறைக்கு புகார் அளித்தும், காவல்துறையில் புகார் அளித்ததும் தற்போது நிலுவையில் உள்ளது.
மேலும், அதிமான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், நல்லம்பள்ளி வட்டார அலுவலர், வட்டாட்சியர், அதியமான்கோட்டை காவல் நிலையம், சென்னை தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகம் வரை புகார் கடிதம் சென்றுள்ளது.
தற்போது அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் 1. நல்லம்பள்ளி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், 2. தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, 3. மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வி. தங்கமணி உள்ளிட்டோர் சட்டத்திற்கு புறம்பாக அருள்மிகு சென்றாய பெருமாள் திருக்கோயில் ஸ்தலத்தை மறைத்தும், பிரம்மாண்ட வணிக வளாகங்களை கட்டியும், ஆடம்பரமான வீடுகளை கட்டியும், சாலை ஓரத்தில் வர்த்தக வளாகங்கள் கட்டியும் பலகோடிகளில் புரளுகின்றனர்.
மேலும், வணிக வளாக கட்டிடம் கட்ட குழி தோண்டியபோது தங்கம், வெள்ளிக்காசுகள் கிடைத்ததாகவும் அதை மூன்று பேரும் பங்கிட்டு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மற்றும் தொல்லியல் துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி அதியமான் கோட்டை காவல் நிலையம், பஞ்சாயத்து தலைவர், கிராம அலுவலகத்திற்கு அரசாணை நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு பிறப்பித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தி.மு.க., மிகப்பெரிய வியாபார நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். ஆனால் சட்டத்திற்கோ, கடவுளுக்கோ, மனசாட்சிக்கோ பயப்படுவதில்லை.
ஊராட்சி மன்ற அனுமதி, வட்டார வளர்ச்சி அலுவலக அனுமதி, (DTDC ஆஃப்ரொவள்) அனுமதி உள்ளிட்டவையின் எதையுமே வாங்காமல் மின்சார துறையில் எப்படி மின் இணைப்பு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. எனவே மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த கோயிலின் புராதன தன்மையை மீட்டுத்தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு அவரது மனவுல் கூறப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க., நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்க செல்போனில் அழைத்த போது, ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் பிரேம்குமார் என்பவர் கூறியதாவது "இந்த வணிக வளாகம் கட்டுமான பணியானது 2019 டிசம்பர் மாதத்திற்கு முன்பு இருந்தே நடைபெற்று வருகிறது. கட்டிட பணிகள் நடைபெற்று வரும் தருவாயில் அனுமதி கேட்டு தங்களை அணுகினர். ஆனால், தொல்லியல் துறையின் அனுமதி பெற்று வந்த பிறகே அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட ஊராட்சி நிர்வாகம் அனுமதிக்க முடியும் என கூறிவிட்டோம். தற்போது வரை அவர்கள் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி வருகின்றனர்" இவ்வாறு கூறினார்.