நீயா? நானா பார்த்துருவோம் வா - திமுக அரசுக்கு சவால் விடும் ஆர்.எஸ்.எஸ் பேரணி
By : Mohan Raj
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என கூறியது திமுக அரசை அலறவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதி வழங்காமல் காவல்துறை இழுத்தடித்தது. மேலும் பேரணி நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என சாக்குபோக்கு சொல்லி காவல்துறை சார்பில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றம் சென்றது, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான அனுமதியை வாங்கிய நிலையில் மீண்டும் தமிழக அரசின் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கவே யோசித்தது, நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.
எப்படியாவது இந்த பேரணியை நடத்திவிட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முடிவுசெய்து நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து இறுதியாக 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள் அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கினார். அதனை தொடர்ந்து காவல்துறை உள் அரங்கில் மட்டும் பேரணியை நடத்தவேண்டும் என கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. இதனை ஏற்காத ஆர்.எஸ்.எஸ் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது.
உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு முன்பு ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு செய்தது, அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் அமர்வு விசாரித்து, பொது சாலைகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை எனவும், இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது என்றும் உத்தவிட்டனர். மேலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது அரசின் கைகளில் உள்ளது, அதனை அமைப்பு பேரணியில் காரணம் காட்டி அனுமதி மறுக்க உரிமையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இறுதியாக, மூன்று தேதிகளை குறிப்பிட்டு பேரணிக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கும்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு உத்தரவிட்டனர் உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு நீதிபதிகள், அந்த மூன்று தேதிகளில், ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கும்படியும் அரசுக்கும் உத்தரவிட்டனர். ஆனால் அந்த 3 தேதிகளில் இரண்டு தேதிகள் ஏற்கனேவே முடிந்து விட்டதால் வரும் மார்ச் 5 ம் தேதி பேரணியை நடத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டது. திட்டமிட்டது மட்டுமல்லாமல் தமிழக காவல்துறை தலைமை அதிகாரியான சைலேந்திர பாபுவுக்கு மார்ச்ச 5 ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வேண்டும் எனவும் அப்படி அனுமதிக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் கடிதம் எழுதினர்.
இந்நிலையில் திமுக அரசு சார்பில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அந்த மனுவில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தற்பொழுது இருக்கும் நிலையில் இந்த பேரணி நடத்துவது என்பது கூடாது என அரசுத்தரப்பு நினைக்கிறது எனவும் மாநிலத்தின் பாதுகாப்பிற்காக இந்த பேரணியை நடத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆர்எஸ்எஸ் எப்படியாவது பேரணி நடத்தி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது போல இந்த பேரணியை எப்படியும் நடத்த விடக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. இதற்குப் பின்புலத்தில் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற இடதுசாரிகள் இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் நுழைந்து விடக்கூடாது என்பதில் தீவிர எண்ணத்துடன் இடதுசாரிகள் அமைப்பு வேலை செய்து வருவதாகவும் அதற்கு திமுக அரசை கருவியாக பயன்படுத்தி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் ஆர் எஸ் எஸ் பேரணி நடந்து விட்டது. இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்றால் அது தங்களுக்கு மிகவும் பின்னடைவாக இருக்கும் என ஆர்.எஸ்.எஸ் தரப்பு கருதுகிறது, சட்டம் ஒழுங்கை காரணம் காண்பித்து பேரணியை தடை செய்வது ஆர்எஸ்எஸ்க்கு ஆரம்பம் முதலே விருப்பமில்லை காரணம் ஆர்எஸ்எஸ், 'எங்களால் தான் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என கூறுவது தவறு நாங்கள் அதுபோன்ற பிரச்சனை ஏற்படுத்தும் பேரணியை என்றுமே நடத்தியதில்லை, நடத்தப் போவதுமில்லை அப்படி சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி எங்களின் பேரணியை தடை செய்வது மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்க்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என நினைக்கிறது.
திமுக அரசோ ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த விட்டால் இடதுசாரிகள் மத்தியில் உள்ள வாக்கு வங்கி எப்படியும் தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிந்து கொண்டு இந்த பேரணி நடத்த விடாமல் செய்து வருகிறது, மேலும் திராவிடம் கழகம் ஆரம்பம் முதலே ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிராக கருத்துக்களை கூறுவதும், பிரச்சாரம் செய்து வருவதும் குறிப்பிடதக்கது.