அண்ணாமலைக்கு சிக்னல் கொடுத்த அமித்ஷா - திருமாவளவனின் அரசியல் அஸ்திவாரத்தை அசைக்க துவங்கிய பா.ஜ.க
By : Mohan Raj
அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தட்டிக் கொடுத்ததன் காரணமாக விடுதலை சிறுத்தைகளை அதிகம் அடிக்க துவங்கியிருக்கிறார்.
சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் பாஜக இடையேயான மோதல் முற்றியுள்ளது. கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் பாஜகவை பற்றி கருத்துக்கள் கூறுவதும், பாஜகவினர் அதற்கு பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. இந்த நிலையில் திருமாவளவன் கடந்த வாரம் பாஜக பற்றி குறிப்பிடுகையில் ஒருபோதும் பாஜகவுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைக்காது என கூறினார். மேலும், 'சிறுத்தை தன் உடம்பில் உள்ள கரும்புள்ளிகளை கூட மாற்றிக்கொள்ளுமே தவிர, பாஜக தன்னுடையை கொள்கையை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவின் சங்பரிவாரர்கள்ன் புத்தி ஒருபோதும் மாறாது.. அது சாதீயவாத புத்தி.. அது சனாதன புத்தி.. அது மாறவே மாறாது.. அந்த பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களைத்தான் எதிர்க்கின்றோம்... அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள் என்றாலும், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை' என்றார் திருமாவளவன்.
திருமாவளவன் இப்படி ஆவேசமாக பேசிய அடுத்த இரு தினங்களில் அண்ணாமலை அதற்க்கு பதிலடி தரும் விதமாக, 'தி.மு.க.விலிருந்து விடுதலைச் சிறுத்தைகளை நீக்குவதற்கு முன்பாக தாமே வெளியேறும் முடிவுக்கு திருமாவளவன் வந்திருக்கிறார். அவர் தைரியமாக வெளியே வரட்டும். திருமாவளவன் அவர்களின் கண்முன்னாலேயே விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தொகுதியில் திருமாவளவன் டெபாசிட் கூட வாங்க முடியாது' என அண்ணாமலை ஆக்ரோஷமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குறிப்பாக திருமாவளவனை தாக்கி பேசினார்.
இப்படி இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பாஜக குறிப்பாக அண்ணாமலை தாக்கி பேசுவதற்கு பின்னாடி அமித்ஷா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டெல்லி சென்று வந்த அண்ணாமலைக்கு ரகசிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னணியில் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினர் பாஜக சித்தாந்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துதல், அவதூறு பரப்புதல், மோடி எதிர்ப்பு அலையை மக்கள் மத்தியில் உருவாக்குதல் போன்றவற்றை தமிழகத்தில் செய்துவருகின்றன.
இவர்கள் இரு திராவிட கட்சிகளிடம் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வாங்கிக்கொண்டு ஒற்றை இலக்கத்தில் எம்.எல்.ஏ, எம.பிக்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர்.இவர்கள் வாக்கு வங்கியை உடைக்க வேண்டும், இவர்கள் அரசியலை அசைக்க வேண்டும், இவர்கள் கூட்டணியை உடைக்க வேண்டும், இவர்கள் திராவிட கட்சிகளின் நிழலை விட்டு அனுப்பினால் அவர்களாகவே தேய்ந்துவிடுவார்கள், இப்படி அவர்களை அரசியல் ரீதியாக தனிமை படுத்தினால் கண்டிப்பாக தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு அது பெரிய உறுதுணையாக இருக்கும் என கூறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
விசிக போன்ற இடதுசாரிகளின் அரசியல் கூட்டணி உடைந்தால் மட்டுமே 2024 தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற முடியும் எனவே அவர்களின் வாக்கு வங்கியை சரியுங்கள் என அண்ணாமலைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தட்டிக் கொடுத்ததாக தெரிகிறது.
இப்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த தைரியத்தினால் எப்போதும் இல்லாத அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பாஜக குறிப்பாக திருமாவளவனை அண்ணாமலை தாக்க துவங்கியுள்ளார்.இது மட்டுமல்லால் தடா பெரியசாமி போன்ற பட்டியல் அணி நிர்வாகிகள் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமூக நீதி என்ற பெயரில் நடத்தும் அரசியல் நாடகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் அண்ணாமலை வேலைகளை துவங்கியுள்ளார். இப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அஸ்திவாரமான பட்டியல் இன மக்கள் வாக்கு வங்கியில் கைவைத்த காரணத்தினால் திருமாவளவன் தரப்பு சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இந்தப்பக்கம் திமுக கூட்டணி எந்த சமயமும் துரத்த நினைக்கும் வேளையில் அடுத்தபடியாக நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்படி கூட்டணிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டது அண்ணாமலை அடித்த முதல் அடியின் வெற்றியாக பாஜகவினரால் பார்க்கப்படுகிறது.